

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கடிதம் இன்னமும் கிடைக்கவில்லை. அக்கடிதம் வந்தவுடன் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
இந்த மூவரையும் சிறையிலிருந்து விடுவிக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் அனுமதியை கோரி கடிதம் எழுதியிருப்பதாக புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறும்போது, “இன்று (புதன்கிழமை) காலையிலிருந்து தமிழக அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளதா என்று எனது துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரை கடிதம் ஏதும் வரவில்லை. அந்த கடிதம் வந்ததும், அதை பரிசீலனை செய்து உரிய முடிவை எடுப்போம்” என்றார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறும்போது, “தமிழ்நாடு அரசின் முடிவு தவறானது; துரதிருஷ்டவசமானது. இது ஒரு மோசமான நிலையாகும்” என்றார்.