

காஷ்மீரில் 6-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந் துள்ளது.
காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் புர்ஹான் முகமது வானி கடந்த 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து கடந்த 9-ம் தேதி காஷ்மீர் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கு, வடக்கு காஷ்மீரை சேர்ந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. எனினும் ஊரடங்கை மீறி வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
போலீஸ் நிலையங்கள், சி.ஆர்.பி.எப். முகாம்களை ஆர்ப் பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். போலீஸ் ரோந்து வாகனத்தை ஆற்றில் தள்ளிவிட்ட தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
மேலும் பாதுகாப்புப் படை யினரை குறிவைத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தி யதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. குல்காம் மாவட்டம் சவுரா நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இர்பான் அகமது தர் நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
நகர் உட்பட பல்வேறு நகரங் களின் மருத்துவமனைகளில் நூற் றுக்கணக்கானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்தவர்கள் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு நிபுணர்கள் காஷ்மீருக்கு வர வழைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் 6-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா மாவட்டம் திகர், இக்பால் சந்தை, தார் மஹல்லா, மாலிக் மஹல்லா, ஜாமியா மசூதி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை குறி வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோல வேறு பகுதிகளிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. எனினும் மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை.
கலவரத்தால் அதிகம் பாதிக்கப் பட்ட பத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. ஹுரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் இன்றுவரை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு விமானம்
இனிவரும் காலங்களில் கல வரத்தைக் கட்டுப்படுத்த ஆர்ப் பாட்டக்காரர்களின் மறைவிடம், எண்ணிக்கையை அறிந்து கொள்ள ஆளில்லா சிறிய கண்காணிப்பு விமானங்களைப் பயன்படுத்த காஷ்மீர் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நகர் லால் சவுக் பகுதியில் நேற்று ஆளில்லா சிறிய விமானம் பறக்க விடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில இடங்களில் மட்டும் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பெரிய அளவில் வன்முறை இல்லை. எனினும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவு கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.