

டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கென்யாவைச் சேர்ந்த மரியா புரூண்டி என்ற பெண் தாக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து கிரேட்டர் நொய்டாவுக்கு காரில் சென் றேன். எனது வீட்டுக்கு அருகில் சென்றபோது காரை மறித்த ஒரு கும்பல் என்னை தாக்கியது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் பயணம் செய்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறியபோது, அவர் காரில் இருந்தபோதோ, கீழே இறங்கியபோதோ யாரும் தாக்கவில்லை என்றார்.
இதனிடையே கென்ய பெண் உடலில் காயத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனினும் அவர் வயிற்றில் வலி இருப்பதாக கூறினார் என்று பரிசோதனை நடத்திய டாக்டர் சனில் கபூர் தெரிவித்தார்.
இதனிடையே ஆப்பிரிக்க மாணவர் கூட்டமைப்பின் பிரதி நிதிகள் கூறியபோது, சில குடும்ப பிரச்சினைகளால் மரியா புரூண்டி மனக் குழப்பத்தில் உள்ளார். அவர் போலீஸ் நிலையத்தில் தவறான தகவல்களை கூறியுள்ளார் என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கென்ய தூதரகம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனை திரும்பப்பெற அந்த தூதரகம் முடிவு செய்துள்ளது.