

இயற்கை எரிவாயு விலையை நிர்ணயம் செய்ததில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, மத்திய ஹைட்ரோ கார்பன் அலுவலகத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் வி.கே.சிபல், பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை இந்த தகவலைத் தெரிவித்தார்.
ஓய்வுபெற்றவர்களான அமைச்சர வைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம், கடற்படையி தளபதி அட்மிரல் தஹிலாணி, இந்தியச் செலவினப் பிரிவு செயலாளர் ஈ.ஏ.எஸ்.சர்மா மற்றும் பிரபல வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல்வரிடம் இந்த புகார் கொடுத்திருந்தனர்.
இது குறித்து டெல்லி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது: இந்த புகாரின்பேரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அரசுக்கு சொந்தமான கிணறுகளில் இருந்து எரிவாயு எடுத்து விநியோகிக்க 17 ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டபோது எரிவாயு (ஒரு யூனிட்) விலை 2.3 டாலர் என நிர்ணயிக்கப்பட்டது. ரிலையன்ஸின் கூட்டு நிறுவனம் இதே வாயுவை வங்கதேச கிணறுகளில் எடுத்து ஒரு யூனிட் 2.5 டாலர் விலையில் விற்கிறது.
80 மில்லியன் யூனிட்டாக இருக்க வேண்டிய உற்பத்தியில் வேண்டும் என்றே 18 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டு செயற்கையாக அதன் தேவை கூடும்படி செய்யப்பட்டது.
ஒரு யூனிட் எரிவாயு விலை, மத்திய அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து 4 டாலர்களாக உயர்த்தப்பட்டது. இதன் பிறகும் வரும் ஏப்ரல் 1 முதல் 8 டாலர்களாக உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
எரிவாயு விலை உயர்வினால், ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 54,000 கோடி ரூபாய் லாபமும், அதே அளவுக்கு அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த தலைமை தணிக்கை குழு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு விலை உயர்வின் போதும் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளது.
இந்த உயர்வில், ஆளும் காங்கிரஸுக்கு பலன் கிடைத்தி ருக்கும். இது எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்துள்ளதால் அவர்கள், இதை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதிக் கின்றனரா என பார்க்கவேண்டும்.
நான் பிரதமருக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளுடன் கடிதம் எழுத இருக்கிறேன். விசாரணை முடியும் வரை விலை உயர்வு உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்.விசாரணைக்கு அனைத்து மத்திய அமைச்சகங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கிணறுகளில் நிர்ணயிக்கப்பட்டபடி எரிவாயு உற்பத்தி செய்ய முடியவில்லை எனில் அதை, ரிலையன்ஸிடம் இருந்து கைப்பற்றி ஓ.என்.ஜி.சி போன்ற மத்திய அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்துவேன்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
இது போன்ற மேலும் பல பெரிய பெரிய ஊழல்கள் தொடர்பாக வரும் நாட்களில் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் கூறினார். அப்படி உத்தரவிட அதிகாரம் உள்ளதா என கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.