Published : 07 Nov 2013 10:28 AM
Last Updated : 07 Nov 2013 10:28 AM

காமன்வெல்த் மாநாடு: காங். உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் குழப்ப நிலை நீடிப்பதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தை பிரதமர் புறக்கணித்தால், அது சர்வதேச அளவில் இந்தியா மீதான இமேஜ் பாதிக்கும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

ஆனால், கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே.அந்தோணி ஆகியோர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்க மறுத்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் முடிவெடுப்பார் என்று மட்டும் சொல்லி வருகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்த டெல்லியில் வியாழக்கிழமை மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், டெல்லியில் வெள்ளிக்கிழமை சோனியா தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசித்து இறுதி முடிவை எடுப்பார் என நம்பப்படுகிறது.

தமிழகத்தில் போராட்டம் தீவிரம்

இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.

ஜெயந்தி நடராஜன் கடிதம்

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடரஜன் 5-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாவிட்டால் அது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போதும், அதற்குப் பின்னரும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்பதை எடுத்துரைப்பதாக அமையும் என குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது என்று டெல்லியில் அரசு உயர் அதிகாரிகள், வெளிறவு அதிகாரிகள் வட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கபதா, வேண்டாமா என்பது குறித்து பாதுகாப்பு நிபுனர் அஜை சான்ஹி கூறுகையில்: இலங்கை போன்ற அண்டை நாட்டை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. மாநாட்டை புறக்கணித்தால் அங்கிருக்கும் தமிழர்களுக்கு நியாயமாக பெற்றுத் தர முடிந்த சலுகைகளை கூட பெற்றுத்தர முடியாமல் போய்விடும் என்றார்.

குர்ஷித் வாதம்

இதற்கிடையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைக்குத் தான் அடுத்தமாதம் செல்லவிருப்பதை, தொலைக்காட்சி பேட்டின் ஒன்றிம் மூலம் குர்ஷித் உறுதி செய்துள்ளார்.

"நான் அங்கு (இலங்கை) செல்வேன் என்பதைச் சொல்ல முடியும். இலங்கைத் தமிழர் பிரச்சினை எங்களுக்கு மிகவும் முக்கியமாகவே உள்ளது" என்று தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள குர்ஷித், பிரதமர் பயணம் பற்றி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். "இலங்கையுடன் இணைந்து செயல்படவில்லை என்றால், நிறைய விஷயங்களைச் செய்ய முடியாமலேயே போயிவிடும். தமிழக மீனவர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும். அப்படி இருக்கும்போது எப்படி இலங்கையைத் தவிர்க்க முடியும்?" என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் தீர்மானம்

முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x