

கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி, மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவர், முதல்வர் வந்தபின்பு தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என எழுதி வைத்துள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள வீட் கிராமத்தைச் சேர்ந்தவர் தானாஜி சந்திரகாந்த் ஜாதவ் (45). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் வங்கியில் ரூ.60 ஆயிரமும், சிலரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியும் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வறட்சி பாதிப்பால் மனஉளைச்சல் அடைந்திருந்த ஜாதவ், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு வீடு அருகே மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் ஜாதவ் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், ‘முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இங்கு வந்து விவசாயிகளின் கோரிக்கையை கேட்டபின்னர் தான் எனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.