

பெங்களூரில் இரண்டு அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த இந்த விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடுகோடி பகுதியில் ஜெய் கிருஷ்ணப்பா காம்பவுண்ட்டில் இந்த இரண்டு அடுக்கு பழைய கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் 4 குடும்பங்கள் வசித்து வந்தன.மேல் தளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கும் இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சவிதா என்கிற 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
பலியானவர்கள் விபரம்
சம்பவம் நிகழ்ந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள். பலியான 5 பேரில் மஞ்சம்மா(50),பத்மா(45) ஆகிய இருவரும் பெண்கள்.போலா சிங் (25 வயது) ,மால்கா சிங் (20 வயது) ஆகிய இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இக்கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சவிதா என்ற 2 வயது குழந்தையும் பலியாகியுள்ளது.
மின்கசிவு
அடுக்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆடுகோடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ''கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் பலத்த மழை பெய்து வருவதால் அந்த பழைய கட்டிடத்தின் சுவர்கள் வலு விழந்ததாக தெரிகிறது. மேலும் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட திடீர் மின்கசிவால் கட்டிடம் இடிந்து விழுந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. கட்டிடத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
ரூ.1 லட்சம் நிவாரணம்
கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.