Last Updated : 31 Jul, 2016 11:29 AM

 

Published : 31 Jul 2016 11:29 AM
Last Updated : 31 Jul 2016 11:29 AM

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் சித்துவின் மனைவி முதல்வர் வேட்பாளரா?

பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் சேரவில்லை. என்றாலும் தனக்கு பதிலாக தனது மனைவியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும்படி ஆம் ஆத்மி கட்சியிடம் அவர் வலியுறுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “பஞ்சாப் தேர்தலில் எங்கள் கட்சியின் முக்கிய பிரச்சாரகராக இருக்க சித்து சம்மதித்து விட்டார். ஆனால் தனக்கு பதிலாக தனது மனைவியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி கோரியுள்ளார். வேண்டுமானால் கட்சி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கலாம் எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆலோசனை செய்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

அமிர்தசரஸ் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த சித்து, கடந்த மக்களவை தேர்தலில் இருந்தே கட்சியில் ஓரம்கட்டப்பட்டு வந்தார். இவரது தொகுதியை பறித்த பாஜக அங்கு அருண் ஜேட்லியை நிறுத்தியது. ஆனால் ஜேட்லி தோல்வி அடைந்தார். சமீபத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்து, கடந்த 18-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் தேர்தல் நடவடிக்கையில் இருந்து தன்னை பாஜக விலகியிருக்கச் சொன்னதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். என்றாலும் தனது எதிர்காலத் திட்டம் குறித்து இதுவரை எதுவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார். இவருக்கு காங் கிரஸ் கட்சியில் இருந்தும் அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கேப்டன்அம்ரீந்தர்சிங்கும் சித்துவை சந்தித்து பேசினார். எனினும் பஞ்சாபில் 3 எம்.பி.க் களுடன் வளர்ந்து வரும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மியில் சேர்வதே சித்துவின் முதல் விருப்பமாக உள்ளது.

சித்துவின் மனைவியான டாக்டர் நவ்ஜோத் கவுர், பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். இவரும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இதனால் தனது சுமை குறைந்து விட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்தார். என்றாலும் அவர் முறைப்படி ராஜினாமா செய்யவில்லை.

பாஜக ஆதரவுடன் பஞ்சாபை ஆளும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் தொடக்கத்தில் இருந்தே சித்து தம்பதிகளுக்கு நல்லுறவு இல்லை என கூறப்படுகிறது. எனவே பஞ்சாப் ஆளும் கட்சியை சித்து தம்பதிகள் கடுமையாக விமர்சிப்பார்கள் என ஆம் ஆத்மி நம்புகிறது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு பிறகு சித்து தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x