

நாகாலாந்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெலியாங் முடிவு செய்தார். இதற்கு பழங்குடியின அமைப்பி னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இப்பிரச்சினையை சரியாக கையாள தெரியவில்லை என முதல்வர் ஜெலியாங்குக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 49 பேரும் போர்க்கொடி உயர்த்தினர். மேலும் அண்டை மாநிலமான அசாமின் காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியபடி, ஜெலியாங் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெலியாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நாகா மக்கள் முன்னணி தலைவர் சுர்ஹோஜெலி லெய்ஜைட்சூ புதிய முதல்வராக பதவியேற்க வுள்ளார்.
மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட நாகாலாந்து சட்டப் பேரவையில் ஆளும் நாகாலாந்து ஜனநாயக கூட்டணியில், நாகா மக்கள் முன்னணிக்கு 48 எம்எல்ஏக் கள் பலம் உள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவரான லெய்ஜைட்சூ புதிய முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக நாகா மக்கள் முன்னணி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், தற்போதைய எம்.பி.யுமான நெய்பியூ ரியோவை முதல்வராக்க வேண்டும் என எம்எல்ஏக்கள் குரல் எழுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சியில் இருந்து காலவரம்பின்றி நீக்கப்பட்டதால் முதல்வராக பதவியேற்பதில் விதிகள் இடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் லெய்ஜைட்சூவை ஆதரித்து 58 எம்எல்ஏக்கள் கையெழுத்திட் டிருப்பதாக கூறப்படுகிறது.