

புதுச்சேரியில் உள்ள ஆங்கிலோ பிரஞ்ச் டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் டெல்லியில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் செவ்வாய்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க நடவடிக்கை குழுக்களின் சார்பில் இதற்கு தலைமை ஏற்ற அபிசேகம் நிருபர்களிடம் கூறுகையில், ’இந்த ஆலையை நவீனப்படுத்த ரூ.500 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி உதவிட வேண்டும். 1980 முதல் 1992 வரை இந்த பஞ்சாலை, ரூ.125 கோடிக்கான அன்னிய செலாவணியை ஈட்டிள்ளது. அந்த உரிமை அடிப்படையில் இந்த நிதியை தரவேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்தார். புதுச்சேரி பஞ்சாலையை நவீனப்படுத்த 1994-ல் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்ட சென்னா ரெட்டி குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணத்தால் அந்த நிதி போதவில்லை. எனவே ரூ.500 கோடி உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.