

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் அத்துமீறிய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநில எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து முகாமிட்டுள்ளதாக வந்த செய்தியை உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,"எல்லைப் பகுதிகளில் வீரர்கள் தவறி பிற நாட்டிற்கு வந்துவிடுவது இயல்பானது தான். இந்திய வீரர்களும் சீன எல்லையில் நுழைந்ததாக இதற்கு முன்னர் புகார் வந்துள்ளது. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை.
ரோந்து பணியில் உள்ள நமது வீரர்கள், சீன ராணூவத்தினர் வழி தவறி எல்லைப் பகுதியில் நுழையும் சம்பவங்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர்.
எல்லையில் நிரந்தர தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம். எல்லை வரையறையை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் இருப்பதால், தடுப்புகள் அமைக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் தொடரும்" என்றார்.