

அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் ஒட்டுமொத்த ஊடகம் மீதானது அல்ல, மாறாக குறிப்பிட்ட சில ஊடக முதலாளிகளையும், செய்தி ஆசிரியர்களையும் கருத்தில் கொண்டே அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி கோவா மாநில தலைவர் ராஜேந்திர ககோட்கர் விளக்கமளித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்த ஊடகங்கள் விலை போய்விட்டதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கோவா மாநிலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கேஜ்ரிவாலின் விமர்சனம் தொடர்பாக அம் மாநில ஆம் ஆத்மி தலைவர் ராஜேந்திர ககோட்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் கூறுகையில், "இந்த விளையாட்டை விளையாடுவது மீடியா உலகின் உச்சத்தில் உள்ள சில ஊடக முதலாளிகளும், செய்தி ஆசிரியர்களுமே அவர். எனவே கேஜ்ரிவால் விமர்சனத்தை ஊடகவியலாளர்கள் தங்கள் அனைவர் மீதான தாக்குதலாக கருதக்கூடாது" என்றார்.
இருப்பினும், கேஜ்ரிவால் தனது விமர்சனத்தை பொதுப்படையாக முன்வைக்காமல், குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம் என தான் கருதுவதாகவும் ராஜேந்திர ககோட்கர் கூறினார்.