

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 48 வயதான திவாரி கடந்த தேர்தலில் லூதியானா தொகுதியில் போட்டியிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான சுரேஷ் கல்மாடி மற்றும் பன்சால் உள்ளிட்ட ஊழல் புகார்களில் சிக்கியவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என மணீஷ் திவாரி கருத்து தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.
இதை தொடர்ந்து திவாரி மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் வெளியிட்ட மூன்றாவது பட்டியலில் திவாரியின் பெயர் இடம் பெறவில்லை. லூதியானாவிற்கும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இதய சிகிச்சை காரணமாக டெல்லி மருத்துவமனையில் திவாரி அனுமதி க்கப்பட்டார். தோல்வி பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவே அவர் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்துள்ளார்.