

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டும் பீரங்கிக் குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.
ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கடந்த 48 மணி நேரத்தில் நான்காவது முறையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஜவுரி மாவட்டத்தின் பால கோட் செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் திக்வார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
அதேபோல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பிம்பர் காலி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.