Last Updated : 20 Aug, 2016 11:21 AM

 

Published : 20 Aug 2016 11:21 AM
Last Updated : 20 Aug 2016 11:21 AM

சாக்‌ஷிக்கு ரூ.50 லட்சம் பரிசுடன் பதவி உயர்வு அளிக்கிறது ரயில்வே அமைச்சகம்

ரியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்குக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசுடன் பதவி உயர்வும் அளிக்கப்பட உள்ளது. இது, அவர் பணியாற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் வழங்கப்பட இருக்கிறது.

ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக திகழ்பவர் சாக்‌ஷி மாலிக். இவர், வடக்கு ரயில்வேயின் பொருளாதாரத்துறை டெல்லி பிரிவில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இந்த பணி, கடந்த 2013 ஆம் ஆண்டு கிடைத்தது. இதை, தனது 21 ஆம் வயதில் பெற்ற சாக்‌ஷிக்கு அப்போது, 2010-ல் நடைபெற்ற அகில உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் முதன்முறையாக 58 கிலோ பிரிவில் வெண்கலப்பதக்கம் கிடைத்திருந்தது.

அடுத்து, 2014-ல் நடைபெற்ற அகில உலக போட்டியின் 60 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். இதே வருடம் நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து அவர், ஆசியாவின் சீனியர் பிரிவிற்கான மல்யுத்தப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தற்போது ஒலிம்பிக்கிலும் வென்றிருப்பதால் சாக்‌ஷிக்கு மத்திய ரயில்துறை அமைச்சகம் அவரை அரசிதழ் பதிவு அலுவலர் பதவிக்கு உயர்த்தி ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய ரயில்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், 'சாக்‌ஷி ரயில்துறையில் பணியாற்றுவது குறித்து பலருக்கும் தெரியவில்லை. இதற்கு அவர் தொடர்ந்து பயிற்சியில் அதிகமாக ஈடுபட்டிருப்பது காரணம் ஆகும். இவரது ஒலிம்பிக் வெற்றிக்கு பின் தாம் அவர் தம் துறையில் பணியாற்றுவது குறித்து ரயில் அமைச்சகத்திற்கு தெரிந்தது. இவரை ஊக்கப்படுத்தும் வகையில் பதவி உயர்வுடன் ரூ.50 லட்சமும் அளிக்கப்பட உள்ளது. இவரது பயிற்சியாளரான குல்தீப் மாலிக்கிற்கும் ரூ.10 லட்சம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.

இதற்காக மத்திய ரயில்துறை அமைச்சகம் சார்பில் பெரிய விழாவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் இறுதி முடிவு ரியோ ஒலிம்பிக்கில் இருந்து சாக்‌ஷி இந்தியா திரும்பிய பின் செய்யப்படும். இவரது ஒலிம்பிக் வெற்றிக்கு பின் ஹரியாணா மாநில அரசு மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உட்பட பலரும் சுமார் ரூ.2.5 கோடி வரை பரிசுகளை ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x