Last Updated : 09 Jun, 2016 08:38 AM

 

Published : 09 Jun 2016 08:38 AM
Last Updated : 09 Jun 2016 08:38 AM

புதிய கட்சி தொடங்க தமீமுன், கருணாஸுக்கு சிக்கல்: கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் அபாயம்

அதிமுக சின்னத்தில் போட்டி யிட்டு எம்.எல்.ஏ.க்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் புதிய கட்சி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமுமுகவின் அரசியல் அமைப் பான மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்தவர் தமீமுன் அன்சாரி. பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்த இவர், கடந்த தமிழக தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தமீமுன் அன்சாரி அறிவித்தபடி, புதிய கட்சியை மத்திய தேர்தல் ஆணையத்தில் உடனடியாக பதிவு செய்து அதை அதிகாரப்பூர்வமாக அவரால் தொடங்க முடியவில்லை. எனினும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் சின்னத்தில் போட்டி யிட்டு நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் சட்டப்படி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பினும் தன்னை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவே கூறி வருகிறார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் கொடியையே வாகனங்களில் பறக்க விட்டுள்ளார். இந்நிலையில் தமீமுன் அன்சாரியின் தற்போதைய எம்.எல்.ஏ. பதவிக்காலம் வரை அவர் புதிய கட்சி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி அவர் புதிய கட்சிக்கு விண்ணப்பித்து அங்கீகாரம் பெறுவார் எனில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என மத்திய தேர்தல் ஆணைய சட்டங்கள் கூறுகின்றன.

இதேபோல், முக்குலத்தோர் புலிப்படை எனும் சமூக அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தார். இதற்காக அவருக்கு கிடைத்த வாய்ப்பால் அதிமுக சார்பில் போட்டியிட்டு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் தனது அமைப்பு ஒரு சமூகத்தின் பெயரை தாங்கியிருப்பதால், அதை விரைவில் அரசியல் கட்சி யாக மாற்றப் போவதாக அறிவித் துள்ளார். இது குறித்த செய்தி கடந்த ஜூன் 2-ல் ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது. அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் கருணாஸ் அவ்வாறு புதிய கட்சியை தொடங் கினால் அவர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்து, அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்படும்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங் கள் கூறும்போது “இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது ‘பி பார்ம்’ எனும் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்திருப்பார்கள். இது சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினர் களுக்கு மட்டுமே அளிக்கப்படும். எனவே சட்டப்படி அதிமுக உறுப்பினர்களான இருவரும் புதிய கட்சி தொடங்கினால் அல்லது புதிய கட்சியில் உறுப்பினர்களாக இணைந்தால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியை இழப்பார்கள். தற்போது அதிமுக உறுப்பினர்களான இவர்கள் வேறு கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவதும் நடவடிக்கைக்கு உரியதே. ஆனால், இதற்கான நடவடிக்கையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தான் எடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி ஒருவர் ஒரு கட்சியின் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். இரு கட்சிகளிலும் உறுப் பினராக இருப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதே நபர் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யாக இருந்தால் அவர் வகிக்கும் இந்தப் பதவியை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் இழப்பார்கள். இதற்கான நடவடிக்கையை அவர்கள் மீது சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற சபாநாயகர் மட்டுமே எடுக்க முடியும். இதற்கான புகார்களையும் சபாநாயகர்களிடம் அவை உறுப்பினர்கள் மட்டுமே கூற முடியும்.

தமிழகத்தில் இதற்கு முன்கடந்த 2004 மக்களவை தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) தலைவரான காதர் மொய்தீன், திமுக சார்பில் போட்டியிட்டு வேலூர் தொகுதி எம்.பி.யானார். திமுக எம்.பி.யாக இருந்தும் இவர் தன்னை ஐயூஎம்எல் கட்சித் தலைவராக கூறி வருவதுடன் அதன் கொடியையும் பயன்படுத்தி வருவதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை காயிதே மில்லத் பேரனான தாவூத் மியான் கான் தொடர்ந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x