

கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீதான பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஐடிபிஐ வங்கி உயர் அதிகாரிகள் 4 பேர் உட்பட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கிகளில் கடனாக பெற்ற ரூ.6 ஆயிரம் கோடியை விஜய் மல்லையா வட்டியுடன் செலுத்தக் கோரி வங்கிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி கடன் வசூல் தீர்ப்பாயம், வங்கிகளுக்கு விஜய் மல்லையா கொடுக்க வேண்டிய கடனை வட்டியுடன் வசூலிக்குமாறு சிபிஐக்கு உத்தர விட்டது. எனவே டெல்லியை சேர்ந்த 12 சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் பெங்களூரு விரைந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் வீடு, யுபி சிட்டி, கிங் பிஷர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். 12 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற இந்த சோதனையின்போது விஜய் மல்லையாவின் வங்கிக் கணக்குகள், நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், பங்கு நிலவரம் ஆகியவை குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்தனர். மேலும் பண மோசடி வழக்கில் தீர்வு காணும் வகையில் பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், ''விஜய் மல்லையா மீதான பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஐடிபிஐ வங்கியின் முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வால், முதன்மை நிதி அதிகாரிகள் பி.கே. பாத்ரா, ஸ்ரீனிவாசன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல கிங் பிஷர் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி ரகுநாதன், ஷைலேஷ் போர்கர், அமித் நத்காமி, ஏ.சி.ஷா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது''என தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கிங் பிஷர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் கிங் பிஷர் அறிவித்துள்ளது.