

நாட்டில் மோடி அலை வீசவில்லை என்றும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு அமையும் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.
ஹோலி பண்டிகையையொட்டி முலாயம் சிங் தனது சொந்த ஊரான சாய்பாய்க்கு திங்கள்கிழமை சென்றார்.
அப்போது அவர் பேசியதாவது: “நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை. ஊடகங்கள்தான் மோடியை முன்னிறுத்தி செய்தி வெளியிடுகின்றன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மோடியால் அரசு அமைக்க முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 75-ல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். 50 தொகுதிகள் வெற்றி பெற்றால் கூட போதும். யார் ஆட்சி அமைப்பது என்பதை சமாஜ்வாதி கட்சி முடிவு செய்யும் நிலை ஏற்படும். பெண்கள் வாக்களிப்பதை தவிர்க்கின்றனர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவில் பங்கேற்க வேண்டும்” என்றார். உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மத்தியில் சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு அதிகரித்தால்தான், மாநிலத்தை முன்னேற்றப் பாதை யில் கொண்டு செல்ல முடியும்” என்றார்.- பி.டி.ஐ.