Published : 18 Oct 2013 09:08 AM
Last Updated : 18 Oct 2013 09:08 AM

நரேந்திர மோடி இன்று சென்னை வருகை

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருவதை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் மாநில ஐ.ஜி. ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தொடர்ந்து தமிழகம் வருகிறார்.

கடந்த மாதம் திருச்சியில் நடந்த பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டார். இந்நிலையில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை மீண்டும் தமிழகம் வருகிறார் நரேந்திர மோடி. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தனி விமானத்தில் ஆமதாபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேர் விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மோடியை வரவேற்கிறார்கள். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசுகிறார். இதற்காக விமான நிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்படுகிறது. விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் கலந்து கொள்வதற்காக 130 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வகுக்க வேண்டிய வியூகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசுகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்சோரி எழுதிய நூலையும் நரேந்திர மோடி வெளியிடுகிறார். விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை காலை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இணை மற்றும் துணை ஆணையர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை பல்கலைக்கழக அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டையை கொண்டுவருபவர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிய குஜராத் ஐ.ஜி. ராஜேந்திரன் வியாழக்கிழமை சென்னை வந்தார். நரேந்திரமோடி செல்லும் வழி, சென்னை பல்கலைக்கழகம், பாஜக அலுவலகம் ஆகியவற்றை அவர் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். மோடி விழா நடக்க உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட அரங்கம் அருகே தீவிர சோதனை செய்யும் வெடிகுண்டு நிபுணர்கள்.

மோடி நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு:

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்க தமிழ்வேலன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம் என்பது மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். புகழ்பெற்ற பல சான்றோர்களை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு பயில்கின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் ஒரு உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகழ்பெற்ற நபரான டாக்டர் அமினா வாதுத் அந்த நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தது. முதலில் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அவரது உரை குறிப்பிட்ட சிலரின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்து விடக் கூடும் எனக் கூறி கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டது.

குஜராத் மாநிலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் படுகொலைக்கு காரணமானவர் என புகாருக்கு உள்ளாகி உள்ள அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 18-ம் தேதி (வெள்ளி) சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

நரேந்திர மோடி ஓர் இந்து அடிப்படைவாதி. பல்வேறு மதத்தினர் பயிலும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அவர் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே டாக்டர் அமினா வாதுத் நிகழ்ச்சிக்கான அனுமதியை ரத்து செய்தது போலவே, அதே அளவுகோலின்படி நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். இதற்கான உத்தரவுகளை காவல் துறைக்கும், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். . பல்கலைக்கழக வளாகத்தினுள் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தங்க தமிழ்வேலன் கோரியுள்ளார்.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x