

கோவா மாநிலத்தில் கட்டிடம் இடிந்த விபத்தில் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தப்பி ஓடிய கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில், கன்கோனா நகரில் உள்ள இந்த 5 மாடி குடியிருப்புக் கட்டிடம் சனிக்கிழமை திடீரென இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவினரும் ராணுவத்தினரும் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இடிபாடுகள் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணி மந்தமாக நடைபெறுவதாகவும், அதில் சிக்கி இருப்பவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண உதவி குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தக் கட்டிடத்தைக் கட்டிய நவி மும்பையைச் சேர்ந்த பாரத் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் விஷ்வாஸ் தேசாய் மற்றும் ஒப்பந்ததாரர் ஜெய்தீப் சைகல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி உள்ள அவர்கள் இருவரையும் தேடி வருவதாக காவல் துறை ஆய்வாளர் ஹரிஷ் மத்கைகர் கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் இப்போதைக்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் காவல் துறை டிஐஜி ஓ.பி. மிஷ்ரா தெரிவித்தார்.