ஓரினச் சேர்க்கை குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து என்ன?: திக்விஜய் சிங் கேள்வி

ஓரினச் சேர்க்கை குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து என்ன?: திக்விஜய் சிங் கேள்வி
Updated on
1 min read

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது மௌனத்தை கலைத்து கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவின் கீழ் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி விவாதம் நடத்த முன்வந்தால், 377-வது சட்டப் பிரிவை ஆதரித்துத்தான் நாங்கள் கருத்துத் தெரிவிப்போம். ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு மாறான செயல் என்பதே எங்களின் கருத்து. எனவே, ஓரினச் சேர்க்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியா ளர்கள் கேட்டபோது, “நாடாளுமன்றம் விரும்பினால், 377-வது சட்டப்பிரிவை நீக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்தொற்றுமையை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்தி மத்திய அரசு ஆலோசனை நடத்தலாம். அந்த கூட்டத்தில் அரசு முன்வைக்கும் யோசனை குறித்து எங்களின் கருத்தைத் தெரிவிப்போம்” என்றார்.

திக்விஜய் சிங் கேள்வி

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ட்விட்டர் இணையத்தில் கூறியிருப்பதாவது: “377-வது பிரிவு பற்றி பாஜக தனது கருத்தைத் தெரிவித்துவிட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in