

டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் ஆப்பிரிக்காவின் நைஜீரிய இளைஞர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கல்வி பயிலவரும் ஆப்பிரிக்க மாணவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் இனவெறி தாக்குதல்கள் குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "நான் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாழ்கிறேன். நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி, 'நீ நரமாமிசம் உண்பவனா?'. இதுதவிர இன்னும் பல புரிதலற்ற கேள்விகளையும், இவர்கள் இப்படித்தான் என்ற பார்வையால் வெளிப்படும் கேள்விகளையும் எதிர்கொள்கிறேன். ஆப்பிரிக்கர்கள் மீதான பார்வையும் புரிதலும் தவறு. அதன் வெளிப்பாடே இத்தகைய தாக்குதல் சம்பவங்கள்" என்றார்.
இந்தியா வாழ் ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசிடே ஒகூகனி கூறும்போது, "கிரேட்டர் நொய்டா பகுதியில் நடந்தது போன்ற சம்பவம் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்றன. அவர்கள் எங்களை வேறுவிதமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்தப் பார்வையால் நான் அசவுகரியமாக உணர்கிறேன்" என்றார்.
பாலிவுட் படங்களில் காட்டப்படுவதுபோல்..
பாலிவுட் படங்களில் காட்டப்படுவதுபோல் இந்திய கல்வி நிறுவனங்கள் அமைதியானதாகவும் பன்முகத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும் என்ற கனவுகளுடன் ஆப்பிரிக்க மாணவர்கள் யாரேனும் இந்தியாவுக்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சும் எனக் கூறுகிறார் 2013-ம் ஆண்டிலிருந்து இங்கு வசிக்கும் ஒகூகனி.
"ஒரு பிரபல கல்வி நிறுவனத்தில் எனக்கு இடம் கிடைத்தது. அந்த வகுப்பில் நான் மட்டுமே ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர். நான் வகுப்பறைக்குள் நுழையும்போதெல்லாம் அங்கே கிண்டலும் கூச்சலும் அதிகமாகும். அவர்கள் என்ன சொல்லி என்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அது இனவெறி ரீதியிலானது என்பது மட்டும் எனக்குத் தெரியும். முதலில் வருத்தமாக இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தேன். காலப்போக்கில் எனக்கு சில இந்திய மாணவர்கள் நண்பர்களானார்கள்" என்கிறார் ஒகூகனி.
மலாவி நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறும்போது, "நன்கு படிக்கும் மாணவர்கள்கூட என்னிடம்வந்து ஆப்பிரிக்கா முழுவதுமே வனமா எனக் கேட்டுள்ளார்கள். ஆப்பிரிக்கர்களுக்கு வீடியோ கேம் என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்பார்கள். சக பெண் மாணவிகள் முன்னால் எனது உடல் அமைப்பு குறித்து கேள்வி எழுப்புவார்கள். நான் அப்போதெல்லாம் மிகுந்த வேதனைக்குள்ளாவேன். ஆனால், என்னால் எதுவும் செய்ய முடியாது. நாம் வாழும் தேசம் கடந்த மற்ற நாடுகளின் கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையையும் தெரிந்துகொள்வதும் அவசியமே. அத்தகைய புரிதல் ஏற்பட்டாலே இதுபோன்ற கிண்டல்கள் ஒழியும்" என்றார்.