

காஷ்மீரில் யூரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் நிலைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தானை ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்து தூதரக ரீதியில் தனிமைப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் யூரி பகுதியில் பணி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை அந்த முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந் தனர். 23 பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பெற்றுவந்த சிப்பாய் கே. விகாஸ் ஜனார்தன் நேற்று உயிரி ழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமைத் தளபதி தல்பிர் சிங் சுஹாக் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். காஷ்மீ ரின் தற்போதைய நிலை குறித்து பிரதமருக்கு உயரதிகாரிகள் விளக்கினர்.
ஐ.நா. உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் பாகிஸ்தான் நிச்சயம் தனிமைப்ப டுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அமைப்புகளிடம் இத்தாக்குதல் தொடர்பான உறு தியான ஆதாரங்களை இந்தியா அளிக்கும் என தகவலறிந்த வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
“பாகிஸ்தானின் நடவடிக்கை சகித்துக்கொள்ள முடியாத எல்லைக்குப் போய்விட்டது. இந்திய-பாகிஸ்தான் உறவு இனி ஒருபோதும் பழையமாதிரி இருக் காது” என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் “யூரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பு இருப்பதை அம்பலப்படுத்தும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நியூ யார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இவ்விவகாரத்தை இந்தியா எழுப் பும் எனக் கூறப்படுகிறது.
முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானுக்கு இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் கிடைத்துள் ளன. தீவிரவாதிகளிடமிருந்து கைப் பற்றப்பட்ட உணவு, ஆயுதங்கள் ஆகியவற்றில் பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்பதற்கான அடை யாளங்கள் உள்ளன. மேலும், கைப் பற்றப்பட்ட ஜிபிஆர்எஸ் கருவி, அவர்கள் பாகிஸ்தானிலிருந்து கிளம்பியிருப்பதைக் காட்டுகிறது.
ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரண்பிர் சிங், பாகிஸ்தா னுக்கு இத்தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை குழுவினர், விசாரணைக்காக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். எல்லையில் உள்ள மூன்றடுக்கு ஊடுருவல் எதிர்ப்பு வளையத்தை மீறி, தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினர் என்பது குறித்தும், யூரி முகாமுக்கு எப்படி வந்தனர் என்பது குறித்தும் அறிய ராணுவ தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பிரணாபுடன் சந்திப்பு
யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.