

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பிரதமர் இல்லம் நோக்கி அணிவகுத்தனர்.
ரோஸ் வேலி சிட்பண்ட் ஊழல் வழக்கில் சுதிப் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதற்கு திரிணமூல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித் தார். பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக போராடும் எதிர்க்கட்சி களுக்கு எதிராக சிபிஐ போன்ற அமைப்புகளை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சுதிப் கைது செய் யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் கட்சியின் 36 எம்.பி.க் கள் நேற்று டெல்லியில், எண் 7 லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கிச் சென்றனர். இவர்களைப் பாதி வழியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து திரிணமூல் எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, “நாங்கள் அமைதியான முறையில் பிரதமர் இல்லம் நோக்கிச் சென்றோம். எங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வாகனங்களில் ஏற்றினர். அப்போது எங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டனர்” என்றார்.
சுதிப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலம் மீது திரிணமூல் காங்கிரஸார் கல்வீசித் தாக்கினர். இதில் பலர் காயம் அடைந்தனர். 6 கார்கள் சேதம் அடைந்தன.
ரோஸ் வேலி சிட்பண்ட் ஊழல் வழக்கில் முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை திரிணமூல் எம்.பி. தபஸ் பால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் இக்கட்சி யின் 2-வது எம்.பி.யாக சுதிப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.