Published : 26 Oct 2013 09:41 AM
Last Updated : 26 Oct 2013 09:41 AM

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயல்வதாக ராகுல் பேசியுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.



இந்த தவறான பேச்சுக்கு, ராகுல் காந்தி பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வெள்ளிகிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 'அந்த இளைஞர்களின் பெயர்களை வெளியிட வேண்டியது ராகுலின் பொறுப்பு. அந்தப் பெயர்களை வெளியிடவில்லை எனில், இந்த சமூகம் அனைத்தையும் அவமானப்படுத்தியமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் மோடி.

மீண்டும் சர்ச்சையில் ராகுல்...

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் முசாபர்நகர் கலவரத்தை பற்றிய ராகுலின் பேச்சுக்கு பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதில், வாக்குகளை பெறுவதற்காக மதவாதத்தை பாஜக வளர்த்து வருவதாகவும், பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்தப் பிரிவினைவாத அரசியலால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உதவி கிடைக்கிறது எனவும், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஐ.எஸ்.ஐ, அணுகுவதாகவும் குறிப்பிட்டார். இந்த பேச்சால், கடும் கோபத்திற்குள்ளான பாஜக, அக்டோபர் 23-ல் ராஜஸ்தானின் சுரு மற்றும் கேர்லியில் ராகுலின் பேச்சுக்கள் ஒளிபரப்பான தொலைக்காட்சி செய்தி சேனல்களின் பதிவுகளை இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளது.

அதில், 'தேர்தல் விதிகளின்படி, எந்த ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளர்களோ ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் இருதரப்பினர் இடையே பேதங்களை கிளப்பும் வகையில் பேசக்கூடாது. ஆதாரமில்லாத புகார்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். ஜாதி, மத அடிப்படையில் வாக்கு கோரக்கூடாது. இந்த மூன்றையும் ராகுல் மீறியுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டு அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களை திசை திருப்பும் முயற்சி...

இது குறித்து மும்பையில் பேசிய வெங்கய்யா நாயுடு, 'பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலின் தாயாக இருப்பது காங்கிரஸ்தான். தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றமுடியாமல் மக்களின் கவனத்தை திருப்ப இந்த ஆதாரமாற்ற பொய்களைக் கூறுகிறது' என்றார்.

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ராகுலின் பேச்சு பொறுப்பற்றது எனக் கண்டித்துள்ளார். மற்றொரு செய்தி தொடர்பாளரான பிரகாஷ் ஜாவடேகர், 'இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூற ராகுல் மத்திய உள்துறை அமைச்சரும் அல்லர்: பிரமரும் அல்லர்' என்றார்.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, 'இந்தத் தகவலை அவருக்கு ஐ.பி கூறியிருந்தால், அது விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும்.' என்றார்.

ஆதாரம் இருக்கிறதா?

உபியில் ஆளும் சமாஜ்வாதிக்கட்சி யின் மூத்ததலைவரும், எம்பியுமான நரேஷ் அகர்வால், 'ஐ.எஸ்.ஐ முசாபர் நகரில் இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறது எனும் தன் பேச்சுக்கு ராகுல் ஆதாரம் அளிக்க வேண்டும். அதை நாம் விசாரிப்போம். அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த நாம் அனுமதிக்க மாட்டோம். இதை உபி அரசு வன்மையாகக் கண்டிக்கிறது' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, எம்.பி.க்களிடம் உளவுத் துறை அதிகாரிகள் பேசுவது இயல்பான ஒன்றுதான் என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x