

காஷ்மீரில் கடந்த 45 நாட்களாக இருந்து வரும் பதற்றம் மற்றும் வன்முறைக்கு காயமடைந்தோரில் சுமார் 3,000 பேர் பெல்லட்டுகளினால் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக தெற்கு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவம் உள்ள பகுதிகளில் பெல்லட்டுகளினால் அதிகம் பேர் காயமடைந்துள்ளனர், ஸ்ரீநகர், பட்கம், கந்தேர்பல் ஆகிய மாவட்டங்களில் ஒப்பு நோக்குகையில் பெல்லட் காயங்கள் அதிகமில்லை.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சேகரித்த தகவல்களின் படி சுமார் 3,000 பேர் பெல்லட்டுகளுக்கும் சுமார் 122 பேர் தோட்டாக்களுக்கும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 3,219 பேர்களில் சுமார் 55% பேர் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், குல்காம், புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
அனந்த்நாகில் மோசம்:
தெற்கு காஷ்மீரில் 16 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 11 தொகுதிகளை வென்றுள்ளனர். அனந்த்நாக் மாவட்டத்தில்தான் முதல்வர் மெஹ்பூபா முப்தி இந்த ஆண்டு ஜூனில் வெற்றி பெற்றார். இங்குதான் அதிக அளவில் சிவிலியன்கள் காயம் அடைந்துள்ளனர், அதாவது 1,015 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் 508 பேர் பெல்லட்டினால் காயமடைந்தவர்கள், இதில் 41 பேர் கண்களில் காயமடைந்துள்ளனர். 44 பேர் தோட்டாக்களினால் காயமடைந்துள்ளனர். அனந்த்நாக், குல்காம் மாவட்டங்களில்தான் தோட்டாக்களினால் அதிக அளவாக 122 பேர் காயமடைந்துள்ளனர்.
பலியான 68 உயிர்களில் 50க்கும் மேற்பட்டோர் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். வடக்கு காஷ்மீரின் மாவட்டங்களான பாரமுல்லா (831 பேர் காயம்), குப்வாரா (786), பந்திபோரா (517) ஆகியவற்றிலும் துப்பாக்கியின் வேலைகளுக்கு பாதிக்கப்பட்டோர் அதிகம். பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் சுமார் 1,1346 பேர் பெல்லட் காயமடைந்துள்ளனர்.
பெல்லட்டுகளினால் 972 சிவிலியன்கள் கண்களில் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் சுமார் 2,600 பேர் காயமடைந்துள்ளனர். ஜூலை 8-ல் தொடங்கி இன்று வரை நாளொன்றுக்கு சுமார் 175 பேர் என்ற விகிதத்தில் காயமடைந்து வருகின்றனர்.