

நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்தவொரு ஆவணங்களையும் தன்னிடம் வழங்குமாறு பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி உரிமை கோர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டின் முதல் பிரதமரான நேரு காலத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகைக்கு சொந்தமான சுமார் ரூ.2000 கோடி சொத்துக்களை கையகப்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக சோனியாவும், ராகுலும் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராக தேவை யில்லை என கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து மார்ச் மாதம் இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி சுப்ரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி மத்திய நிதியமைச்சகம், நகர்புற அபிரு விருத்தி துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை இவ்வழக்கு சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பித்ரோடா மற்றும் யங் இந்தியா நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.எஸ்.தேஜி, பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தின் உத் தரவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித் தார். ‘‘ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு போகிற போக்கில் பிறப்பித்தது போல் உள்ளது. வழக்கு விசாரணை யில் எதிர் தரப்பினர் ஏற்கெனவே இணைந்திருக்கும் நிலையில் ஆவ ணங்களை தாக்கல் செய்யும்படி கோர முடியாது. இது சட்டத்துக்கு புறம்பானதாகும்’’ என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.