

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் தங்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு காரில் ஷாஜஹான்பூர் புறப்பட்டுச் சென்றனர்.
டெல்லி கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தோஸ்துபூர் கிராமத்தை அவர்களது கார் நெருங்கிய நிலையில், புலந்த் சாஹர் என்ற இடம் அருகே ஒரு இரும்பு கம்பி அவர்களது கார் கண்ணாடியை பதம் பார்த்தது. இதையடுத்து ஓட்டுநர் உடனடி யாக காரை நிறுத்தி கீழே இறங் கியபோது, சாலையோரத்தில் இருந்த புதர்களில் மறைந்திருந்த கொள்ளையர்கள் சிலர் திடீரென அவர்களை சூழ்ந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டினர். மேலும் ஓட்டுநரை விரட்டிவிட்டு, காரை அருகில் இருந்த வயல் பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். பின்னர் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டிவிட்டு, 35 வயது பெண்ணையும், அவரது 14 வயது மகளையும் அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றது.
விடிந்ததும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கயிற்றை கழற்றி விட்டு அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த பயங்கர சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த புலந்த்சாஹர் மாவட்ட எஸ்.பி வைபவ் கிருஷ்ணன் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர் கூறும் போது, ‘‘சந்தேகத்துக்கு இடமான 15 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். முக்கிய குற்றவாளி யார் என்பதும் அடையாளம் தெரிந் துள்ளது’’ என்றார்.
அதே சமயம் உத்தரப் பிரதேச மாநில டிஜிபி ஜாவீத் அகமதுவும், இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார். அவர் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘புலந்த்சாஹர் சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகளை பிடிப்பதும் சவாலாக உள்ளது. அனைவரை யும் கைது செய்வதற்கு உத்தர விட்டுள்ளோம். சம்பவம் தொடர்பான முக்கிய துப்புகளும் கிடைத்துள்ளன’’ என குறிப்பிட்டுள்ளார்.
அந்த கொள்ளை கும்பல் தாய், மகளை பலாத்காரம் செய்ததது மட்டுமின்றி, அந்த குடும்பத்தினர் வைத்திருந்த ரூ.11,000 ரொக்கம் மற்றும் சில தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.