Published : 01 May 2017 09:15 AM
Last Updated : 01 May 2017 09:15 AM

7 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் இணைந்த சிறுமி: ஒடிசாவில் காணாமல் போனவர்

ஒடிசாவில் 7 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை தொலைத்த 12 வயது சிறுமி, வளர்ந்த பின் அவர்களை கண்டுபிடித்து ஒன்று சேர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஷ்யாம் கவுடியா, முனி கவுடியா. 7 ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதி புரி ஜெகன்னாத் கோயிலுக்கு சென்றபோது மகள் பூஜா கவுடியாவை தொலைத்து விட்டனர். அப்போது அவருக்கு 12 வயது. பெற்றோரை காணாமல் பரிதவித்த பூஜாவை ஒரு சிலர் காப்பாற்றி ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

அங்கு கடந்த 7 ஆண்டுகளாக வளர்ந்து வந்த பூஜா ஒரு நாள் கூகுள் இணையதளத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களை தேடிய போது புரி ஜெகன்னாத் கோயில் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் தனது பெற்றோர் மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு நிழலாக நினைவுக்கு வந்தது. அதை காப்பக நிர்வாகிகளிடமும் தெரிவித்து பெற்றோரிடம் சேர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து களத்தில் இறங்கிய காப்பக நிர்வாகம் நெல்லூர் போலீஸாரின் உதவியை நாடியது. அவர்களும் புரி போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு காணாமல் போனவர்கள் பற்றிய பழைய ஆவண விவரங்களை தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி ஆவணங்களை தேடியதில் பூஜா குறித்து புகார் அளித்த அவர்களது பெற்றோர் யார் என்பதும் அவர்கள் எங்கு வசிக்கின்றனர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக புகார் மனுவில் கொடுக்கப்பட்டிருந்த புரி மாவட்டத்தின் நிமாபாதா பகுதி விலாசத்துக்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் பூஜாவின் பெற்றோர் அந்த வீட்டை 2011-ல் காலி செய்து விட்டதை அறிந்து போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும் அக்கம்பக்கத்தவர் களிடம் தீவிரமாக விசாரித்ததில் அவர்கள் ஜெகத்சிங்பூர் என்ற ஊரில் வசிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆந்திரா போலீஸார் நெல்லூரில் இருந்து பூஜாவை அழைத்து வந்து ஒடிசாவில் உள்ள பெற்றோரிடம் இருதினங்களுக்கு முன் சேர்த்து வைத்தனர். 7 ஆண்டுகளுக்குப் பின் காணாமல் போன மகளை மீண்டும் பார்த்ததும் கவுடியா தம்பதி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x