தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்து: தருண் விஜய் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்து: தருண் விஜய் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர் கள் தாக்கப்பட்ட சம்பவத்தை நிறவெறி என அந்நாட்டின் தலைவர்கள் குற்றம்சாட்டினர். தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் இந்த குற்றச் சாட்டுக்கு பதில் அளித்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், ‘‘இந்தியர்களிடம் நிறவெறி கிடை யாது. அப்படி இருந்திருந்தால் தென் மாநிலங்களில் கறுப்பு நிறமாக உள்ள மக்களுடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வோம்’’ என தெரிவித்தது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனது கருத்துக்கு தருண் விஜய் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் மக்களவை நேற்று கூடியதும், எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை எழுப்பி தருண் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தின. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘தென்னிந்தியர்கள் இந்தியர்கள் இல்லையா?. தருண் விஜய் சாதாரண மனிதர் அல்ல. மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். பாஜக கொள்கை குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியவர். அவரது பேச்சு தேசவிரோதமானது பாஜக இந்த நாட்டைப் பிளவுப்படுத்த நினைக்கிறதா?. தருண் விஜய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’’ என ஆவேசமாக பேசினார்.

அவரது கருத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிற உறுப்பினர்களும், தருண் விஜய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ஏற்கெனவே தருண் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த நாடு மதசார்பற்ற நாடு. எனவே மேற்கொண்டு இதைப் பிரச்சினையாக்க கூடாது’’ என கேட்டுக் கொண்டார்.

எனினும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தருண் விஜய்க்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். அவை நடவடிக்கை முடங்கியதால், ‘‘இது நீதிமன்றம் அல்ல. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்’’ என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமாரும் உறுப்பினர்களைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ‘‘நாம் அனைவரும் ஒன்றே. இந்தியாவும் ஒரே நாடுதான்’’ என்றார். எனினும் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து, 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக கேள்வி நேரத்தின் போது மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஆனந்த் குமார், ‘‘அவரும் தென்னிந்தியர் தான்’’ என்றார்.

கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in