பாகிஸ்தான் மீது பொருளாதார போர்: வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை மறு ஆய்வு செய்ய இந்தியா முடிவு

பாகிஸ்தான் மீது பொருளாதார போர்: வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை மறு ஆய்வு செய்ய இந்தியா முடிவு
Updated on
1 min read

பாகிஸ்தான் மீது பொருளாதார போர் தொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டுக்கு வழங் கப்பட்டுள்ள `மிகவும் வேண்டப் பட்டநாடு அந்தஸ்து’ மறுஆய்வு செய்யப்பட உள்ளது.

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப் படுத்த இந்தியா வியூகம் அமைத்து செயல்படுகிறது.

இதேபோல அந்த நாட்டின் மீது பொருளாதார ரீதியாக போர் தொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நதிநீர் பங்கீடு, வர்த்தகம் ஆகியவற்றில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந் தத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜீலம் உள்ளிட்ட நதிகளிலிருந்து இந்தியா அதிகபட்ச தண்ணீரைப் பயன் படுத்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து

அடுத்தகட்டமாக பாகிஸ்தா னுக்கு வழங்கப்பட்டுள்ள `மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை’ மறுஆய்வு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடை பெறுகிறது. இதில் வெளியுறவு அமைச்ககம், வர்த்தக அமைச்சக மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த அந்தஸ்து ரத்து செய்யப் பட்டால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் பாகிஸ்தானின் ஏற்றுமதி பாதிக் கப்படும் என்று அசோசேம் தெரி வித்துள்ளது.

இதேபோல பாகிஸ்தானுடனான தெற்காசிய தாராள வர்த்தக மண்டல ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர் பாக சர்வதேச வர்த்தக அமைப் பிடம் (டபிள்யூ.டி.ஓ.) இந்தியா முறைப்படி புகார் அளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மிரட்டல்

இதனிடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் அஹ்மர் பிலால் சூபி நேற்று கூறியதாவது: சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா மட்டும் ஒருதலையாக ரத்து செய்ய முடியாது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் முறையிடும்.

அதையும் மீறி இந்தியா ஒப்பந் தத்தை ரத்து செய்தால் பிரம்ம புத்திரா நதியில் சீனாவும் இதே அணுகுமுறையைக் கையாளும். இந்தியாவின் நடவடிக்கைகளை சீனா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in