பெங்களூரு ஏரிகளில் இருந்து வெளியேறி சாலையில் பறக்கும் நுரை

பெங்களூரு ஏரிகளில் இருந்து வெளியேறி சாலையில் பறக்கும் நுரை
Updated on
1 min read

பெங்களூருவின் வர்தூர் மற்றும் பெல்லந்தூர் ஏரிகளில் அதிகளவு மழை நீர் மற்றும் சாக்கடை கலந்து, நுரையாக சாலைகளில் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நுரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென அதிகரித்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

பெங்களூரு நகரின் அன்றாட கழிவுகள், தொழிற்சாலை நச்சுகள் ஆகியவை வர்தூர் மற்றும் பெல்லந்தூர் ஏரிகளில்தான் அதிகளவில் கலக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், சாக்கடையும், மழை நீரும் ஏரிகளில் கலந்து, அதிகளவில் நுரையாக வெளியேறியுள்ளது.

இந்த நுரை பழைய விமான நிலைய சாலை மற்றும் அதன் அருகாமை சாலைகளில் பறந்தது. அத்துடன் அங்கிருந்த வணிக வளாகங்களுக்கு உள்ளேயும் நுரை புகுந்தது.

அங்கு மட்டுமல்லாது ஹவினானே, சுப்பிரமணியபுரா ஏரிகளில் இருந்தும் நுரைகள் வெளியேறியதால், அருகாமையில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வடிகுழாய் முயற்சி தோல்வி

இந்நிலையில் நுரையைக் கட்டுப்படுத்த பெங்களூரு நீர் வழங்கு மற்றும் கழிவுநீர் வாரியம் வடிகுழாய்களை அறிமுகம் செய்தது. ஆனால் அதீத மழை நீரால் பறந்த நுரையின் அளவு குறையாமல், அதிகரித்தது. இந்நிலையில் வடிகுழாய் முறையை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியதாகவும், அதிக மழையை எதிர்பார்க்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையை வெளியேற்ற சிறந்த, திட்ட மாதிரிகளை வழங்கலாம் என்று நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in