

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் தாக்கியதில் 17 ராணுவ வீரர்கள் பலியானதையடுத்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், ராணுவத்தளபதி ஜெனரல் தல்பீர் சிங் ஆகியோர் காஷ்மீர் விரைந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று கருதப்படும் இன்றைய யுரி பகுதித் தாக்குதலை அடுத்து ராணுவத் தளபதி தல்பீர் சிங் அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிய சென்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் விரைவில் ஸ்ரீநகர் சென்று அங்கிருந்து தாக்குதல் நடந்த யுரி பகுதிக்கு செல்லவுள்ளார்.
மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இருந்து வரும் பதற்றமான சூழ்நிலையில் இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் போல் மேலும் சில நடக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கூடுதல் ராணுவ வீரர்கள் அங்கு ஏற்கெனவே அனுப்பப் பட்டுள்ளனர்.
லெப்டினண்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ட்விட்டரில் கூறும்போது, “யுரி தாக்குதல், இது என்னுடைய பழைய முகாம். செப்.8-ம் தேதி இந்தத் தாக்குதல் குறித்து எச்சரிக்கப்பட்டது, 10 நாட்களில் நடந்தே விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரில் புர்ஹான் வானி என்கவுண்டரைத் தொடர்ந்து வன்முறைகள், பெல்லட் துப்பாக்கிகள் பிரயோகம் அதனால் சர்ச்சை என்று பலவிதமான பதற்ற நிலை உள்ளது. இதனால் அதிகபட்ச பயங்கரவாத ஊடுருவல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு முழுதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியின் ஊடாக 30 முறை பயங்கரவாத ஊடுருவல் நடக்க, இந்த ஆண்டில் ஜூலை 31 புள்ளிவிவரங்களின் படியே இதுவரை 72 வெற்றிகரமான பயங்கரவாத ஊடுருவல் நிகழ்ந்துள்ளது.