

தேசத்தை விற்பவர்களைவிட தேநீர் விற்பவர் மேலானவர் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வாலுக்கு, குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது, “சில நாள்களுக்கு முன்பு இங்கு காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி பேசினார். அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார். அவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போதைய நிர்வாக நடைமுறை, அவரது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி, கொள்ளுத் தாத்தா நேரு ஆகியோரால் கொண்டு வரப்பட்டது. அவர்கள்தான் தங்களின் சுயலாபத்துக்காக இந்த நடைமுறையை உருவாக்கினார்கள். இப்போது அவர்களே மாற்றத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதம் பரவி வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியது குறித்து மோடி பேசும்போது, “தீவிரவாதத்தை ஒடுக்க வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுவிட்டது. இதன் காரணமாகத்தான் தீவிரவாதமும் நக்ஸல் இயக்கங்களும் பரவி வருகின்றன. தீவிரவாதத்தை தடுக்கத் தவறியது காங்கிரஸ் கட்சிதான். பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதுபோல் பழியை முதல்வர் ரமண் சிங் மீது போடுகிறார்கள். என்னவொரு கபட நாடகம்” என்றார் மோடி.
மோடி தன்னுடைய இளமைப் பருவத்தில் சகோதரரின் தேநீர் கடையில் பணியாற்றினார். சில நாள்களுக்கு முன்பு இதை சுட்டிக்காட்டிப் பேசிய சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், 'தேநீர் விற்றவருக்குத் தேசத்தை எப்படி ஆளத் தெரியும்?' என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மோடி, “தேசத்தை விற்பவர்களைவிட தேநீர் விற்பவர் மேலானவர். சுயநலத்துக்காக நாட்டையே விற்பவர்களை ஆட்சியில் அமர்த்தலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.