

கர்நாடகாவில் மாடுகளை வேனில் ஏற்றிச் சென்றதால் அடித்துக் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகிக்கு சாகும் தருவாயில் இந்துத்துவா அமைப்பினர் தாகத்துக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என அவரது நண்பர் அக் ஷய் தேவடிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக் ஷய் தேவடிகா ‘தி இந்து'விடம் கூறியதாவது:
கேஜிகெ கிராமத்தில் பிரவீன் பூஜாரி பல ஆண்டுகளாக கோழிப் பண்ணையும், சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். பாஜகவில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடைய கிராமத்தில் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள ளார். சம்பவத்தன்று நாங்கள் மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த போது இந்துத்துவா அமைப்பினர் வேனை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கினர்.
இதனால் அச்சமடைந்த நாங்கள் தப்பி ஓட முயன்றோம். எங்களை விரட்டிப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்கினர். எதற்காக எங்களை அடிக்கிறீர்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம் என கேட்டதற்கு எந்த பதிலும் சொல் லாமல் சரமாரியாக அடித்தார்கள். இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும் கிராமத்தின் மையப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்களை எழுப்பி, 'நாங்கள் 3 மாடுகளை மீட்டு இருக்கிறோம். இந்த திருடர்களுக்கு நல்ல பாடம் கற்பித்திருக்கிறோம்''என சொன்னார்கள். அப்போது பிரவீன் பூஜாரி, ‘‘எனக்கு மயக்கமாக இருக்கிறது. தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். இல்லாவிடில் செத்துவிடுவேன்''என கெஞ்சினார்.
இந்துத்துவா அமைப்பினரின் மிரட்டலுக்கு பயந்த மக்கள் யாரும் தண்ணீர் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக வலியால் துடித்த பிரவீன் பூஜாரி ஒரு கட்டத்தில் மயங்கினார். அப்போது அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்புங்கள் என கதறினேன். இதனால் இந்துத்துவா அமைப்பினர் சிலர் எனது தலையில் அடித்தனர். சாகும் தருவாயில் தாகத்துக்கூட தண்ணீர் கொடுக்காமல் அவரை அடித்தே கொன்றுவிட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக் ஷய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
24 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பிரம்மாவர் போலீஸார் நேற்று மாலை உடுப்பி மாவட்ட இந்து ஜாகர்ன வேதிகே அமைப்பின் நிறுவனர் அர்விந்த் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.