பினாமி நில பேர ஊழல் வழக்கு: லாலு மகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - 12-ம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித் துறை மீண்டும் உத்தரவு

பினாமி நில பேர ஊழல் வழக்கு: லாலு மகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - 12-ம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித் துறை மீண்டும் உத்தரவு
Updated on
1 min read

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மீதான ரூ.1,000 கோடி பினாமி நில பேர ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி வருமான வரித் துறை சார்பில் புதிதாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக நேற்று அவர் நேரில் ஆஜராகாத காரணத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வரும் 12-ம் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே வழக்கில் பாரதியின் கணவர் சைலேஷ் குமார் இன்று ஆஜராக வேண்டும் என வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. பாரதியுடன் தொடர்புடைய ஆடிட்டர் ராஜேஷ்குமார் அகர் வாலும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். லாலுவின் மகள் சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு அகர்வால் உதவியதாக கூறப்படுகிறது.

வழக்கு விசாரணைக்காகவே பாரதிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லயின் பிஜ்வாஸன் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டை வாங்கும் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து பாரதியும் அவரது கணவரும் பினாமி பேரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தவிர பிற சொத்து பேரங்கள் தொடர்பாகவும் வருமான வரித் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாரதி மற்றும் அவரது கணவருக்கு எதிராக புதிதாக கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்’’ என்றனர்.

அதேசமயம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக தனது மகள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் தன்னை அச்சுறுத்த முடியாது என்றும் லாலு தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜகவோ லாலு பிரசாத் மகள் பாரதி மற்றும் பிஹார் மாநில அமைச்சர்களாக உள்ள அவரது மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவரும் ரூ.1,000 கோடி அளவுக்கு நில பேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in