

ஊழல் நமது மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. ஊழலை ஒழிக்க மற்ற அரசுகளை காட்டிலும் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) கூட்டத்தில் ராகுல் பங்கேற்று பேசுகையில், “ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டின் மிக முக்கியப் பிரச்சினை ஊழல். இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், ஊழலை ஒழிக்க மற்ற அரசுகளை காட்டிலும் பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளது. நம் நாட்டில் நெறிப்படுத்தும் அமைப்பு முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்” என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிகள் குறித்து ராகுல் பேசுகையில், “யாருடைய குரலை பிரதிபலிக்கிறோம் என்பதில்தான் அரசியல் கட்சியின் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. புள்ளி விவரங்களை காட்டி தோல்வியை மறுக்க விரும்பவில்லை. மக்களின் கருத்தை பணிவுடன் ஏற்கிறோம். சமீபத்திய தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வும் முக்கிய காரணம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பொருள்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் அடிப்பதை நாம் தடுக்க வேண்டும். உணவு தானியங்கள் நிலத்திலிருந்து நேரடியாக நுகர்வோரை அடையும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும்” என்றார் ராகுல்.
திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து ராகுல் பேசுகையில், “நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி, நில ஆர்ஜிதம் என இதற்கான காரணங்களை கூறக்கூடாது. அரசின் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு, உரிய விதிமுறைகளை வகுத்துவிட்டால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்” என்றார்.
பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் அக்கட்சியை விமர்சித்த, ராகுல், “வெறுப்புணர்வின் அடிப்படை யில் மக்களை பிரித்தாளும் கொள்கையை ஒரு கட்சி கடைபிடித்து வருகிறது. இவர்களுக்கு எதிராக கருணை, சகிப்பு தன்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படை பண்புகளை பாதுகாக்க காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே எங்கள் நோக்கம் என்றார்.