

பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி. முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நிறுத்தி வைத்தது.
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரும் இவரது சகாக்கள் சிலரும் கடந்த 2014-ல் 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகவும் அவரது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி பிரஜாபதி கைது செய்யப்பட்டார்.
பிரஜாபதி மற்றும் அவரது சகாக்கள் இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை ரத்து செய்யும்படி அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.