

வரும் 12-ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்பதால் அங்கு உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்கள் இறங்கியுள்ளனர்.
அந்தமான் நிக்கோபர் தீவு அருகே திங்கட்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. ஹுத்ஹுத் என்ற இந்த புயல் வரும் 12-ஆம் தேதி வங்கக் கடலிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டனம் மற்றும் ஒடிசாவின் கோபல்பூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலின் தாக்கம் ஆந்திராவில் பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க ஆந்திர தலைமைச் செயலாளர் கிருஷ்ண ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து புயல் காரணமாக இழப்புகள் நேரிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தாழ்வானப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.