

நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, செப்டம்பர் 17-ம் தேதி வரை 15,000 கன அடி நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட வேண்டும். கடந்த 7-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வரும் 17-ம் தேதியுடன் நீர் திறப்புக் காலம் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தப் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நாள் தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மனு தள்ளுபடி:
அதுமட்டுமல்லாமல் தமிழகத்துக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்க ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்துள்ளனர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்துக்கு தர வேண்டிய 64 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இதனை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டது. கூடுதலாக நீர் தேவைப்பட்டால் காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனையடுத்து காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த் நடைபெற்றது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்புகள் வலுக்கவே கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என தெரிவித்தது.
"கர்நாடகா அரசின் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உகந்ததல்ல . சட்டம், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உச்ச நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த முடியவில்லை என காரணம் கூறுவது ஏற்புடையது அல்ல" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், செப்டம்பர் 20-ம் தேதி வரை நாள்தோறும் 12,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.