

மத்திய அரசுன் மாட்டிறைச்சி தடை சட்டததுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். வடக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவராக இருந்தவர் பச்சு மராக் டோன்.
இவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி விருந்து அளிக்க பச்சு மராக் டோன் முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "விழாவில் ரைஸ் பீர் மற்றும் மாட்டிறைச்சி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கட்சி மேலிடம் கடும் கண்டனம் தெரிவித்தது. மாட்டிறைச்சி வழங்கி விழாவைக் கொண்டாடினால் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகக் கூடும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து வடக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவர் பச்சு மராக் டோன் அவரது பதவியை ராஜினாமா செய்தார். மேகாலயா பாஜக தலைவர் சின்புன் லிங்க்தோவிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை அவர் கொடுத்தார்.
தனது ராஜினாமா குறித்து கூறும்போது, "கேரோ இன மக்களின் உணர்வுகளைப் பேணுவதில் சமரசம் செய்துகொள்ள முடியாது. கேரோ இனத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நான் என் இன மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்கும் கடமை உள்ளது. மாட்டிறைச்சி உண்பது எங்கள் கலாச்சாரம், பாரம்பரியம். பாஜக மத கோட்பாடுகளைத் திணிக்க முயற்சிப்பதை ஏற்பதற்கில்லை" என்றார்.
4 நாட்களுக்கு முன்னர்தான் மேகாலாயா மாநிலத்தின் மேற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைவர் பெர்னார்ட் மார்க் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.