உலக நாடுகளுக்கு தீவிரவாதம் கொடூர அச்சுறுத்தலாக உள்ளது: மொசாம்பிக்கில் பிரதமர் மோடி எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு தீவிரவாதம் கொடூர அச்சுறுத்தலாக உள்ளது: மொசாம்பிக்கில் பிரதமர் மோடி எச்சரிக்கை
Updated on
1 min read

‘‘உலக நாடுகளுக்கு தீவிரவாதம் மிகக் கொடூர அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக மொசாம்பிக் நாட்டுக்கு அவர் வந்துள்ளார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு மொசாம்பிக் வரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதால் அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மொசாம்பிக் அதிபர் பிலிப்பி நியூசியை மபுடோவில் நேற்று மோடி சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது மொசாம்பிக்கில் இருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியாவில் விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிபர் நியூசியுடன் மோடியும் இணைந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:

மொசாம்பிக்கின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. உலகளவில் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. உலகுக்கு மிகக் கொடூரமான அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருக்கிறது. அதை ஒடுக்க இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இணைந்து செயலாற்றும்.

மேலும், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்து பொருட்களை மொசாம்பிக் நாட்டுக்கு இந்தியா வழங்கும். ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் அந்த மருந்துகளை அன்பளிப்பாக வழங்குவோம். அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பு, அவர்களின் நலனுக்காக பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுப்போம். போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுடன் தீவிரவாதம் இணைந்துள்ளது. அதை ஒடுக்க மொசாம்பிக்கும் இந்தியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறு மோடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in