

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தலைமை கண்காணிப்பு அதிகாரி மீதான அச்சத்தால் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் ஒப்புதல் கொடுக்க தயங்குகிறார்கள் என பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார்.
கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்காததால் வளர்ச்சி விகிதம் மந்தமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொள்கை முடக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் பிரதமரின் இந்த கருத்து அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் நடந்த சாதனைகளையும் காங்கி ரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் செயல்பாட்டையும் மக்கள் மதிப்பிடவேண்டும். உலக அளவில் இருமுறை பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோதிலும் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக இருக்கிறது. இதற்காக பாராட்டப்பட்டிருக்கவேண்டிய இந்த அரசுக்கு பாராட்டு கிடைக்கவில்லை.
வளர்ச்சி விகிதம் மந்தமடைய உள்நாட்டு காரணங்கள் உள்ளன. கட்டமைப்புத் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் கிடைப்ப தில்லை. தாம் எடுக்கும் முடிவுக ளுக்கு தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமும் தலைமை கண்காணிப்பு அலுவலகமும் எங்கே கேள்வி எழுப்புமோ என்கிற அச்சம்தான் ஒப்புதல் கொடுக்க உயர் அதிகாரிகள் தயங்கக் காரணம்.
காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த தடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக ரூ.. 5 லட்சம் கோடி மதிப்பு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளதை கூறலாம். இதன் பலன் கிடைக்க சில காலம் ஆகலாம்.
ஊழல் புகார்கள் தொடர்பாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் முந்தைய அரசின் கொள்கைகளைத்தான் எனது அரசு பின்பற்றியது. இப்போது இந்த முறையை முழுமை யாக மாற்றியுள்ளோம்.
ஏல முறையில் தான் 2ஜி அலைக்கற்றை , நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த துறைகளில் எதிர்காலத்தில் இனி ஊழலுக்கு வாய்ப்பு இல்லை.
மக்களின் வருவாய் அதிகரித்துள்ளது
விலைவாசி உயர்வுக்காக எனது அரசு விமர்சிக்கப்படுகிறது. இது சரியானதுதான், பணவீக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக உணவு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் இந்த விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் பலன் அடைந்துள்ளனர். பெரு வாரியான மக்களின் வருவாயும் அதிகரித்துள்ளது. தனி நபர் நுகர்வும் கிராமப்புறங்களில் கூலியும் உயர்ந்துள்ளது.
தேர்தலில் கட்சி வெற்றி பெற முடியும்.
தற்போதைய தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் தருகிறது. அதற்காக மனம் தளர்ந்து விடக்கூடாது. கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் திறம்பட திட்டமிட்டு மக்களவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெற முடியும்.
அண்மையில் நடந்த பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கான காரணங் களை ஆராயவேண்டும். சில மாதங்களில் நடக்கவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் நன்கு திட்டமிட்டு சிறப்பாக ஆயத்தம் செய்துகொண்டால், இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி பதிய வைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு கைகூடும்.
கட்சியின் தலைமையை 2008ல் ஏற்றதிலிருந்து கட்சியை வெற்றிகரமாக நடத்திச்செல்கிறார் சோனியா காந்தி. துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கட்சிப் பணியும் செயல்பாடும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் நமக்கு வழங்கும்.
கட்சியின் அடிப்படை லட்சியங் களை சிறப்பான முறையில் வலியுறுத்தி வருகிறார் ராகுல். அதனால் வருங்காலத்தில் கட்சி புதிய உயரத்தை எட்டமுடியும். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் முழுமை யான வெற்றியை அடையும் என்பதில் சந்தேகம் துளியும் இல்லை.
சில தவறுகளை செய்து விட்டோம்
சில தவறுகளை செய்து விட்டோம். .அந்த தவறுகளை சரி செய்யவும் அவற்றிலிருந்து பாடம் கற்கவும் முயற்சிக்கிறோம். ஆனால் எங்களின் நோக்கங்கள் மிகத் தெளிவானவை என்றார் பிரதமர்.
-பிடிஐ