

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்குள் புகுந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேரை தாக்கிய சிறுத்தை இன்னும் பிடிபடவில்லை. இதனால் சிறுத்தை வெளியேறி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை அடுத்த மீரட் நகரின் ராணுவ குடியிருப்புப் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுத்தை புகுந்து தாக்கியது.
பின்னர் அங்கிருந்து தப்பி அருகிலுள்ள ராணுவ மருத்துவமனையில் புகுந்த சிறுத்தை, சுமார் 12 மணி நேரம் பதுங்கி இருந்தது. பின்னர் அங்கிருந்தும் தப்பி ஓடி விட்டது.
உபி மாநில போலீஸின் பி.ஏ.சி. எனும் அதிரடிப் படையுடன் வனவிலங்கு பாதுகாப்பு துறையி னர் சுமார் 70 பேர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த நான்கு நாட்களாக தேடியும் சிறுத்தை சிக்கவில்லை.
இதுகுறித்து, மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் 'தி இந்து'விடம் கூறுகையில், ‘‘கடைசி யாக திங்கள்கிழமை ஒரு வணிக வளாகத்தின் சிசிடி கேமராவின் பதிவுகளில் தென்பட்ட சிறுத்தை, அதன்பிறகு அகப்படவில்லை. எனவே, அது நகரை விட்டு ஓடி விட்டதாக அறிவித்து விட்டோம்’’ என்றார்.
இதனால், வெள்ளிக்கிழமை முதல் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறுத்தை ஒரே இடத்தில் 10 நாட்கள்வரை ஒளிந் திருந்து திடீரென வெளியில் வரும் என வதந்தி பரவி வருகிறது. இதை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.