

நூறு சதவீத கல்வி கற்ற மாநில மாக புதுச்சேரி மாறி வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 3 ஆயிரம் இளைஞர்கள் அரசு பணியில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் சுமதி அறக்கட்டளை சார்பில் உருளையன்பேட்டை தொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு, ரத்ததானம் செய்தோருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுவையில் அனைவருக்கும் தரமான கல்வி தர வேண்டும் என்பதே அரசு எண்ணம். ஏழைகள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஏழை குழந்தைகளும் பொறியியல், மருத்துவப் படிப்புகளை படிக் கின்றனர். இதன்மூலம் கட்டணம் ஏதுமில்லாமல் ஏழை குழந்தைகள் கல்வி கற்க முடிகிறது. நூறு சதவீத கல்வி கற்ற மாநிலமாக புதுச்சேரி மாறி வருகிறது. நன்றாக படிக்கும் வாய்ப்பு புதுவையில் உள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 3 ஆயிரம் இளைஞர்கள் அரசு பணியில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப் பட்டனர். இதை யாராவது குறை கூற முடியுமா. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளை திறந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.
நிதி நெருக்கடியிலும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்து கிறோம். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. இவ்வாறு அவர் பேசினார்.