Published : 13 Oct 2014 06:11 PM
Last Updated : 13 Oct 2014 06:11 PM

ஹுத்ஹுத் புயல்: விசாகப்பட்டிண கடற்கரைச்சாலை குடியிருப்புவாசிகளின் ‘மரண அனுபவம்’

பயங்கரப் புயல் ஹுத்ஹுத் விசாகப்பட்டிணத்தை உருக்குலைத்துப் போட்டதை பீதியுடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த மக்கள், மரண அனுபவத்தை எதிர்கொண்டனர்.

புயலின் மையம் நகரத்தினுள் நுழைந்த பிறகு கோர தாண்டவம் நிகழ்த்தியது. நேற்று மதியம் 1.30 மணியளவில் புயலின் வேகம் உக்கிரமடைந்தது. கடற்கரைச் சாலையில் உடனடியாக கோரதாண்டவம் நிகழ்த்தியது.

கடற்கரைச் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல பூகம்பத்தில் சிக்கியது போல் பயங்கரமாக ஆடியுள்ளன. சுமார் 12 மணி நேரம் தனது கோரத் தாண்டவத்தை ஹுத்ஹுத் நிகழ்த்தியது.

கட்டிடங்களின் கண்ணாடிகள் சில்லு சில்லாக பெயர்தன. கதவுகள் பறந்தன. வீட்டின் மேற்கூரைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் காற்றில் எகிறிப் பறந்தன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் பயங்கர பூகம்பத்தில் சிக்கியது போல் கடுமையாக ஆடிக்கொண்டிருந்ததால், குடியிருப்புவாசிகள் பலர் தங்களது பணம், நகை உள்ளிட்ட பொருட்களை அப்படியே போட்டுவிட்டு வெளியேறினர்.

மதியம் 3 மணியளவில் ஹுத்ஹுத் உச்சம் பெற, குடியிருப்பின் மேல்தளங்களில் இருந்தவர்கள் அனைவரும் கீழ்தளங்களில் ஒன்று கூடி ஒருவரையொருவர் இறுகப் பிடித்தபடி நீண்ட நேரம் பீதியில் உறைந்துள்ளனர்.

இவர்கள் கீழ்தளத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே மேல் தளத்தின் சமையலறை ஜன்னல்கள், படுக்கையறை ஜன்னல்கள் பறந்துள்ளன. பாத்திரங்கள் காற்றில் தூக்கி அடிக்கப்பட்ட காட்சியையும் அந்தக் குடியிருப்புவாசிகள் பீதியுடன் பார்த்தபடி ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தனர். அந்தக் கணத்தில் மரண அனுபவம் என்றால் என்ன என்பதைத் தாங்கள் உணர்ந்ததாக அந்தக் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

24 மணிநேரங்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் போக, பலர் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கச் சென்றுள்ளனர். ஆனால் நொவோடெல் விடுதியின் அறைகளும் ஹுத்ஹுத் தாக்கத்தினால் வசிக்கும் நிலையில் இல்லாததால், மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெறும் ஹாலில் பலரை தங்க வைத்துள்ளது விடுதி நிர்வாகம்.

கடற்கரைச் சாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள், விடுதிகள் கடும் சேதமடைந்துள்ளன. பீச் ரோடில் உள்ள ஸீ கிரீன் விடுதி கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளது. அதன் அனைத்துக் கண்ணாடி அமைப்புகளும் சிதறி, சில்லு சில்லாக சின்னாபின்னமாயின. கைலாசகிரி, பேபி பார்க்கில் உள்ள சிலைகளையே உடைத்தெரிந்துள்ளது ஹுத்ஹுத் புயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x