

ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆந்திராவின் செப்பலுப்படா கிராமத்தை மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தத்தெடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி ஆந்திராவின் வணிக நகரமாக கருதப்படும் விசாகப்பட்டினத்தில் ஹுத்ஹுத் புயல் கரையை கடந்தது. அப்போது, புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் கடலோர கிராமங்கள் பல கடுமையாக பாதிக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் மிகப் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டாலும் அங்கு ஏற்பட்டுள்ள பொருட் சேதம் கடுமையான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக விசாகப்பட்டினம் அதன் தன்மையை முற்றிலுமாக இழந்துள்ளது. இன்னும் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பாததை அடுத்து, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை.
இதனை வெளிப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி புதன்கிழமை அன்று மவுன ஊர்வலமாக சென்றனர்.
இதனை அடுத்து பேசிய வெங்கய்ய நாயுடு, பாதிப்புக்கப்பட்ட ஆந்திராவின் கிராமங்களுள் ஒன்றான செப்பலுப்படாவை தத்தெடுப்பதாக தெரிவித்தார். கிராமத்தின் மறுகட்டமைப்புக்கான உதவிகளை அளிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செப்பலுப்படா கிராமத்துக்காக ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்திராவுக்கு இடைக்கால வெள்ள நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்கிய நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து முறையான மதிப்பீடு அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மேலும் நிவாரண தொகை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.