

வரும் 2020, 2024 மற்றும் 2028-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் திறம்பட பங்கேற்பதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிப்பதற்கு பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக மோடி மேலும் கூறும்போது, “விளையாட்டு கட்டமைப்பு வசதிகள், பயிற்சி, தேர்வு செய்யும் நடைமுறை மற்றும் தொடர்புடைய பிற விஷயங்கள் தொடர்பாக முழுமையான உத்திகளை இந்தப் பணிக்குழு உருவாக்கும். இக்குழுவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இடம் பெறுவார்கள். அடுத்த சில நாட்களில் இக்குழு ஏற்படுத்தப்படும்” என்றார். ரியோடி ஜெனிரோ நகரில் அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா 118 வீரர்களை அனுப்பியது. இதில் 2 பேர் மட்டுமே பதக்கம் வென்றனர். இதனால், விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் போதிய வசதிகளும் ஊக்குவிப்பும் இல்லை என விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.