

கேரளாவில் பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் சேவை நாடி வருவோரை இன்முகத்துடன் வரவேற்று சேவை செய்து அது குறித்து மக்கள் மதிப்பீடுகளையும் கேட்டறிகிறார்.
கேரள மலப்புரம் மாவட்ட பெரிய கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் பணியாற்றுபவர் ஊழியர் அப்துல் சலீம் பல்லியல்தொடி, ‘இங்கு லஞ்சம் தேவையில்லை’ என்ற அறிவிப்புடன் சேவையாற்றுகிறார்.
அங்காடிபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் இவர் முகத்தைப் பார்ப்பதற்கென்றே மக்கள் வருவது வழக்கமாகியுள்ளது. 42 வயதில் 3 ஆண்டுகளுக்காக இவர் கிளார்க்காக நியமிக்கப்பட்டார்.
தனது பொதுச்சேவையில் அவர் எந்த விஷயத்தையும் மறைப்பதில்லை. வெளிப்படையாக லஞ்சத்துக்கு எதிரான வாசகங்களை தன் மேஜையில் மக்கள் கண்ணில் படுமாறு வைத்துள்ளார்.
அவர் வைத்துள்ள மலையாள வாசகத்தில், “உங்களுக்குச் சேவை செய்யவே அரசாங்கம் எனக்கு தினச்சம்பளமாக ரூ.811 (மாதம் ரூ.24,340) அளிக்கிறது. எனது சேவை திருப்தி அளிக்கவில்லையா நீங்கள் என்னிடம் நேரடியாக கேட்கலாம்” என்ற வாசகத்தை வைத்து சேவையாற்றி வரும் அப்துல் சலீம் தன் சம்பளம் மாறும் போதெல்லாம் அதை மக்களுக்கு தெரியுமாறு மேஜை மீதே வெளிப்படையாக எழுதி வைத்து விடுவார்.
இவரது இந்த லஞ்சத்துக்கு எதிரான நோட்டீசை ஆர்வலர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
“சேவை என்பதே அரசாங்க வேலையின் சாராம்சம். பல்வேறு காரியங்களுக்காக எங்களிடம் வருபவர்கள் வெறுங்கையுடன் செல்லக் கூடாது. அவர்கள் திருப்தியுடன் செல்ல வேண்டும்” என்கிறார் அப்துல் சலீம்.
இந்த பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வருபவர்கள் இவரைப் பார்க்காமல் இருக்க முடியாது, தன் பணியில்லை என்றாலும் அதிலும் இவர் மக்களுக்கு உதவுகிறார். அதாவது பல்வேறு சான்றிதழ்கள் அளிப்பது, கட்டிடங்கள் குறித்த ஆவணங்கள் என்று நம்மூரில் அலைய விடும் காரியங்களை இவர் எளிதாக முடித்துக் கொடுக்கிறார்.
இவரது உயரதிகாரி பீதாம்பரம் கூறும்போது, “இவரது அணுகுமுறை மக்கள் தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.
இவரது சேவை உள்ளத்தால் ஒட்டு மொத்த பஞ்சாயத்து அலுவலர்கள் மீதும் நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் ஊழியர்கள்.
இவருக்கு 40% போலியோ குறைபாடு இருந்தாலும் களப்பணியை அவர் எந்நாளும் மறுப்பதில்லை என்று பஞ்சாயத்து தலைவர் ஓ.கேசவன் பாராட்டினார்.
சமீபத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் அலுவலகங்களே மிகவும் ஊழல் விரித்தாடும் இடங்கள் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.