

ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
சீமாந்திரா பகுதி மக்களின் வாழ்க்கையோடு காங்கிரஸ் விளையாடுகிறது. அந்தப் பகுதி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்தை அறியாமலேயே ஆந்திரத்தைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன். சீமாந்திரா பகுதி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை எனது போராட்டம் தொடரும்.
காங்கிரஸுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும் இடையே ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெசன்மோகன் ரெட்டி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.